Thursday, October 7, 2010

Kandar Anubhoothi

அருணகிரிநாதர் அருளிய  கந்தரநுபூதிகாப்பு

நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத்தருள் சண்முக னுக்கியல்சேர்
செஞ்சொல்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர வானை பதம் பணிவாம்.நூல்

ஆடும்பரி வேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடுங் கயமாமுக னைச் செருவில்
சாடுந்தனி யானை சகோ தரனே. 1

உல்லாச நிர் ஆகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லாம் அற என்னை இழந்தநலம்
சொல்லாய் முருகா சுர பூ பதியே. 2

வானோ புனல் பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டவிடம்
தானோ பொருளாவது சண்முகனே. 3

வளைபட்டகைம் மாதொடு மக்களெனும்
தளைபட் அழியத் தகுமோ தகுமோ
கிளைபட் எழு, சூர் உரமுங் கிரியும்
தொளைபட் டு உருவத் தொடு வேலவனே. 4

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தையர் என்றயரும்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணியாஎன வள்ளி பதம் பணியுந்
தணியா அதிமோக தயாபரனே. 6

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங்கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம்பொரு தானவ நாசகனே. 8

மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும்பரிசென் றொழிவேன்
தட்டூடற வேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப்பயனே. 9

கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகாஎன என் கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
த்யாகா சுரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முநிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே. 15

பேராசை எனும் பிணியில் பிணிபட்
டோரா வினையே உழலந் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுரலோக துரந் தரனே. 16

யாமோதிய கல்வியும் எம் மறிவுந்
தாமேபெற வேலவர் தந்தனால்
பூமேல்மயல் போயற மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே. 17

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதிகாவல சூரபயங் கரனே. 18

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே
மிடியென்றொரு பாவி வெளிப்படினே. 19

அரிதாகிய மெய்ப்பொருளுக் கடியேன்
உரிதாஉப தேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந்தரனே. 20

கருதா மறவா நெறிகாண் எனக்
கிருதாள் வனசந்தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே. 21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்
வேளைச்சுர பூபதி மேருவையே. 22

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே 23

கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேனருள் சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரந்தர பூபதியே. 24

மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே. 25

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமனோ
தீதா சுரலோக சிகா மணியே. 26

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே. 27

ஆனா அமுதே! அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ!
யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலை நின்றது தற்பரமே. 28

இல்லே எனு மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29

செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்
றொவ்வாத தென வுணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்ற தலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யெனயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாமுளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வா கனனே. 31

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய்
மலையே! மலை கூறிடு வாகையனே. 32

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணா கரனே. 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே. 34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூ பதியே. 35

நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய் என ஓதிய தெப் பொருள்தான்
வேதாமுதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசேகரனே. 36

கிரிவாய்விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதமே வலையே
புரிவாய் மனனே! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந் தையையே. 37

ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணபுகழ் வேலவனே. 38

மாவேழ் சனனம் கெடமாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே. 39

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே. 40

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலாஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞானொப தேசிகனே. 41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவேலை நிகழ்த் திடலும்
செறிவற் றுலகோடுரை சிந்தையுமற்
றறிவற் றறியாமையும் அற்றதுவே. 42

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினதன் பருளால்
ஆசா நிகளம் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே. 43

சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மாமுடி வேதமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே. 44

கரவாகிய கல்வியுளார் கடைசென்
றிரவாவகை மெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுதகுஞ்
சரவா சிவயோக தயாபரனே. 45

எந்தாயும் எனக் அருள் தந்தையுநீ
சிந்தாகுல மானவை தீர்த் தெனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகம் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவார் அறிவில்
பிறிவொன் றறநின்ற பிரான் அலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதான் அறிய
இன்னும் ஒருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் கிருபைசூழ் சுடரே. 49

மதிகெட் டறவாடி மயங்கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத்திரர் வீறடு சேவகனே. 50

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 51

1 comment:

 1. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete

Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?