google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: September 2013

Friday, September 27, 2013

Seventh Pay Commission

ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி 2013 அன்று, இந்திய மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான ஊதியம், விலைவாசிக்கு ஏற்ப அமையவேண்டும் என்பதன்படி, ஏழாவது சம்பளக் கமிஷன் அமைய வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளது. இக்கமிஷனின் பரிந்துரைகள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.

இதனால் மத்திய அரசின்  ஐம்பது லட்சம்  ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோரும் பயன் பெறுவர்.

நான்காம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

 ஐந்தாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

ஆறாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.


Tuesday, September 24, 2013

Contradictory Captions

படம் ஒன்று கருத்துகள் இரண்டு


24.09.2013 செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் பத்திரிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தேன், மதுரையில். முதலில் பார்த்தது புதிதாய்த் தமிழில் வந்த த ஹிந்து தமிழ் நாளிதழ். வாசிக்க நன்று. அடுத்துப் பார்த்தது தினமலர். அதுவும் நன்று. திடீரென்று எனக்கொரு ஷாக். அது என்ன? இரண்டுமே மதுரைப் பதிப்புகள். ஆனால் செய்திகளில் வேறுபாடு. எப்படி? பாருங்கள் படங்களை.
 கென்யா நாட்டில், நைரோபி நகரத்து வணிக வளாகத்தில்  பிணைக் கைதிகள் மீட்பு. செத்தவர்கள் இதுவரை எழுபது...

தி ஹிந்து நாளிதழ் விளக்கம்: காயமடைந்தவர்களை மீட்பதற்காக குண்டுமழையையும் பொருட்படுத்தாது விரையும் மருத்துவப் பணியாளர்கள்.   

தினமலர் நாளிதழ் விளக்கம்: கென்யா தலைநகர் நைரோபியில் நேற்றும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வணிக வளாகத்திற்குள் இருந்த மக்களை காப்பாற்ற வந்த போலீஸ் மற்றும் டாக்டர்கள் துப்பாக்கி குண்டுக்கு பயந்து  ஓடினர்.  

புண்பட்டவர்கள் என்பதை காயமடைந்தவர்கள் என்கிறது தி ஹிந்து. மருத்துவர்களை டாக்டர்கள் என்று அப்படியே போட்டிருக்கிறது தினமலர். கென்யா தலைநகர் என்பதைவிட கென்யாவின் தலைநகர் என்று போட்டிருக்கலாம். துப்பாக்கி குண்டுக்கு என்பதை விட துப்பாக்கிக் குண்டுக்கு என்று போட்டிருக்கலாம். மக்களை காப்பாற்ற என்பதை விட மக்களைக் காப்பாற்ற என்று எழுதியிருக்கலாம். வணிக வளாகத்திற்குள் என்பதைவிட வணிக வளாகத்துக்குள் என்பது சிறப்பு. துப்பாக்கி குண்டுக்கு என்று சொல்வதைவிட துப்பாக்கிக் குண்டுகளுக்கு என்று சொல்வது மேலானதுபோல் தெரிகிறது.

இவையெல்லாம் இருக்கட்டும், பொருட்குற்றம் இருப்பதை என்னவென்பது! முரண்பாடான கருத்துகளில் எது உண்மை? எது பொய்?