google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Pathinenkeezh Kanakku-Inna Narpathu

Thursday, October 21, 2010

Pathinenkeezh Kanakku-Inna Narpathu

கடவுள் வாழ்த்து
முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா; பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா, சத்தியான் தாள் தொழாதார்க்கு.


நூல்

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின். 1


பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2


கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3


எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். 4


சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை. 5


அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6


ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை. 7


பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு. 8


கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு. 9


பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு. 10


உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல். 11


தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
முலை இல்லாள் பெண்மை விழைவு. 12


மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;
பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,
பிணி அன்னார் வாழும் மனை. 13


வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,
உணர்வார் உணராக்கடை. 14


புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;
கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;
இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,
பல்லாருள் நாணுப் படல். 15


உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
எண் இலான் செய்யும் கணக்கு. 16


ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
ஈன்றாளை ஓம்பா விடல். 17


உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;
சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,
மன வறியாளர் தொடர்பு. 18


குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி. 19


மாரி நாள் கூவும் குயலின் குரல் இன்னா;
வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;
மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா
மூரி எருத்தால் உழவு. 20


ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஒத்து இலாப் பார்ப்பான் உரை. 21


யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22


சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23


ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24


நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது. 25


பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'
அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26


பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல். 27


கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். 28


குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை. 29


நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர். 30


பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;
மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,
தண்மை இலாளர் பகை. 31


தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,
தொன்மை உடையார் கெடல். 32


கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;
முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;
வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,
கள்ள மனத்தார் தொடர்பு. 33


ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;
இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34


எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல். 35


பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;
நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,
கெடும் இடம் கைவிடுவார் நட்பு. 36


நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;
அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,
சிறியார் மேல் செற்றம் கொளல். 37


பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;
மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,
திறன் இலான் செய்யும் வினை. 38


கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,
மடுத்துழிப் பாடா விடல். 39


அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல். 40

No comments: